தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நல சங்கத்தினர் ஓய்வூதிய பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் செய்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நல சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளாக ஓய்வூதிய பணப் பழங்களை உடனடியாக வழங்க கோரியும் ஒன்பது வருட காலமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலை படியை உடனடியாக வழங்க கோரியும் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் தங்களது வாரிசுகளுக்கு வேலை வழங்க கோரியும் ஓய்வு பெற்றோருக்கு இலவச மருத்துவ திட்டத்தை வழங்கிட கோரியும் உடல்நல படியை உயர்த்தி வழங்க கோரியும் நூறு நாளில் ஓய்வூதியரின் பிரச்சினையை தீர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்த தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தும் துறையூர் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஓய்வூதியர்களை வஞ்சிக்காதே கொடுத்துவிடு கொடுத்துவிடு பஞ்சப்படியை கொடுத்துவிடு என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட இச்சங்கத்தை சேர்ந்தவரை கைது செய்தனர். இதனால் துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.