சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்குச் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. மாணவர்களுடன் கலந்துரையாடினார். மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு எத்தனை மாணவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்
சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் வந்தார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்கு ஆளுநர் ரவி சென்றார்.
அங்கு மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது கல்விதான் முக்கியம். கல்வியால் மட்டுமே நாம் முன்னேற முடியும். அதனால் தொடர்ந்து கல்வியை நன்றாக பயில வேண்டும். சிறந்த பாடங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வர வேண்டும் என கூறினார்.
அப்போது இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு சென்று இருக்கிறார்களா என அங்கிருந்த விடுதி வார்டன் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். நீட் தேர்வை எத்தனை மாணவர்கள் எழுதினார்கள். மாணவர்களின் கல்வி நிலை என்ன என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் ஆர்.என். ரவி கேட்டறிரந்தார். பின்னர் மாணவர்கள் அனைவரும் சுவாமி சகஜானந்தாவின் புகழ் பாடலை பாடினார்கள். அதை ஆளுநர் கும்பிட்டபடி ரசித்து கேட்டார்..
இதையடுத்து விடுதியில் இருந்த விருந்தினர்கள் வருகை பதிவேட்டில் ஆளுநர் ரவி, தனது கருத்தை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து ஆளுநர் ரவி மதிய உணவு அருந்தினார். இதையடுத்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்..