தமிழிசை ராஜினாமா ஏற்பு
ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
தமிழிசையின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும், அதுவரை தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வகிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று அனுப்பி வைத்தார்.
தெலங்கானா ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசைக்கும், அப்போது முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதுகூட, ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவில்லை.
தெலங்கானா ராஜ்பவனில் முதல்முறையாக மக்கள் தர்பார் நடத்திய ஆளுநர் என்ற பெருமை தமிழிசைக்கு உண்டு. பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுக்க பிரத்யேக தபால் பெட்டியையும் இவர் ராஜ்பவனில் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த பெருமைக்கும் சொந்தக்காரர் தமிழிசைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியபோது, ‘‘மக்கள் சேவைக்காக மீண்டும் செல்கிறேன். எனக்கு இத்தனை நாட்கள் ஆதரவு அளித்த தெலங்கானா மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்றைக்கும் உங்கள் சகோதரிதான்’’ என்றார்.
தமிழிசையின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும், அதுவரை தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வகிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.