குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படாத நிலையில் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள், கர்நாடகாவிடம் இருந்து நீதிமன்றம் மூலம் உரிய இழப்பீடு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
கர்நாடகத்தில் உருவாகும் காவிரி கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் பெரும்பாலானவை மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வழியே கடலில் கலக்கின்றன. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மேல்முறையீட்டு தீர்ப்பில் தமிழகத்திற்கு 177.25 டி எம் சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும். அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி எம் சி ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டி எம் சி அக்டோபர் மாதம் 16.61 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் எஞ்சிய தண்ணீரை மற்ற மாதங்களில் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்க வில்லை தற்பொழுது மேட்டூரில் 17 டி எம் சி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்கள் எனப்படும் தஞ்சை, நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு போக சாகுபடி நடைபெற்ற இடத்தில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதால் ஆண்டு வருமானத்தில் பாதியை இழந்துள்ளனர். உரிய நீரை கேட்டுப் பெறாத தமிழக அரசு இது தொடர்பாக எந்தவித மேல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. குறுவை இழப்பீட்டை கணக்கு செய்து நீதிமன்றம் மூலம் தமிழக அரசு கர்நாடகாவிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.