திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்
கும்பகோணம் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து சிதறு தேங்காய் உடைத்து, தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இத்தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் பஞ்சலட்சுமிகளுடன் உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர் !
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும் இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் சேவை சாதிக்கிறார், காவிரி நதி மூவாயிரம் தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுக, தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போன்று பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றதாக வரலாறு எனவே 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழாவின் தொடக்கமாக கடந்த 3 ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது , நாள்தோறும் சூர்யபிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்ச லட்சுமிகளுடன் திருத்தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், ஆகியோர் இணைந்து சிதறு தேங்காய் உடைத்து, தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இத்தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாரநாதா, சாரநாதா என்று தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் பஞ்சலட்சுமிகளுடன் உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை சப்தாவர்ணமும் வருகிற 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புஷ்ப பல்லாக்கில் பெருமாள் பஞ்சலட்சுமியுடன் வீதியுலாயுடன் இவ்வாண்டுக்கான தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.