அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்பாள் திருக்கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா
அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்பாள் திருக்கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா மாசி மகத்தினை முன்னிட்டு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லைமாவட்டம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.
அதன்ஒரு நிகழ்வாக மாசி மகத்தில் அப்பா் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படுகின்றது சைவ சமய குறவர்களில் ஒருவரான அப்பர் பெருமானை கல்லை கட்டி கடலில் விட்டபோது சிவபெருமானை நினைத்து பாடல் பாடிட கல்உரல் தெப்பமாக மாறி அப்பர் பெருமானின் பக்தி நிரூபிக்கப்பட்ட திருவிளையாடல் திருவிழா நடைபெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அப்பர் தெப்பத் திருவிழா இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அம்பாள் கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள பொற்றாமரை குளம் வண்ண விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருக்கோயில் மாலை நடைதிறக்கப்பட்டு சாயரட்சை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அப்பா் பெருமான் சிவிகையில் கோயில் வலம் வந்தாா். பின்னா் அலங்காிக்கப்பட்ட தெப்பத்தில் 9 முறை அப்பர் பெருமான் பவனி வந்தார்.
அதன் பின்னர் தெப்பத் திருவிழா மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் கைலாசபர்வத வாகனத்திலும், காந்திமதி அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓதுவா மூா்த்திகள் நிகழ்வினை பாடினாா்.
தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கும் அப்பா் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா் கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.