பள்ளிகளில் இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற கள ஆய்வினை மேற்கொண்ட ஆட்சியர்
விருதுநகர் வட்டம், பாண்டியநகர் மற்றும் தாதம்பட்டி பகுதிகளில் இன்று பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் சந்தித்து, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததற்கான காரணங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து சிறப்பு கள ஆய்வினை மேற்கொண்டார்கள்.
மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் ஊராட்சிகள், துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அரசு அலுவலர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக 10 முதல் 15 மாணவர்கள் வரை 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இடைநின்ற சுமார் 800 மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டார்கள்.
மாணவர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி கல்வியில் சிறப்பான தேர்ச்சி சதவீதமுடைய நமது விருதுநகர் மாவட்டத்தில், இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்களின் இந்த கள செயல்பாட்டிற்கு, பெற்றோர்கள்கள், முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.