வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் தராமல் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சேத்தியாத்தோப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாசனத்திற்கும் தண்ணீர் விட கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி. இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள பூர்த்தங்குடி கிராமத்திலிருந்து தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வீராணம் ஏரியால் சுற்று வட்டார கிராமங்கள் பாசனம் பெற்று வந்ததாகவும், தற்போது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டி விவசாயிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் உள்ள பூர்த்தங்குடி கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையத்தின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள், சேத்தியாதோப்பு சுற்று வட்டார பாசனத்திற்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் பகுதியில் பாசனத்திற்காக வீராணம் ஏரி வெட்டப்பட்டது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கோ மற்ற பயன்பாட்டிற்கோ தண்ணீரை கொடுப்பதில் தவறில்லை.
ஆனால் அதே நேரத்தில் வீராணம் ஏரியால் பாசனம் பெரும் பகுதிகளுக்கு கண்டிப்பாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இதற்காக நாங்கள் பலமுறை போராட்டம் நடத்தி இருக்கிறோம். இப்போது பெயரளவிற்கு வீராணம் ஏரியில் தண்ணீர் திறந்து இருக்கிறார்கள்.
எங்களுக்கு தேவை தற்காலிக தீர்வு அல்ல. நிரந்தர தீர்வுதான். அதனால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தடையின்றி தண்ணீர் தருவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
பேட்டி. திரு. ராமச்சந்திரன், மாவட்ட தலைவர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.