மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கியது
புதுச்சேரி மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கிய நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு தடையை மீறி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கனக-செட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும் உள்ள மீனவ கிராமங்களிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராம் வரை, ஏனாம் மீன்பிடி பகுதிகளிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.
தடையை மீறி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.