விடுதி வார்டனை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தஞ்சையில் உள்ள பார்வைத் திறன் குறையுடைருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மைதானத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை பெரியக் கோவில் மேம்பாலம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
விடுதியுடன் உள்ள இப்பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
வைரவள்ளி என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக விடுதி வார்டனாக பணியாற்றி வருகிறார்.
இவர் மாணவ, மாணவிகளுடன் தாய் பாசத்துடன், தோழமை உணர்வுடன் நட்பு பாராட்டி பழகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதி வார்டன் வைரவள்ளி திருச்சிக்கு பணியிட மாற்றும் செய்யப்பட்டு உள்ளார்.
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் வார்டனை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, வகுப்புக்கு செல்லாமல், காலை உணவு சாப்பிடாமல் பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தின் கீழ் அமர்ந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.