சினிமாவை மிஞ்சும் சம்பவம் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் பெரிய காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்தத் தெரு வழியாக அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், புதன்கிழமை கோவில்பட்டி பகுதியில் இருந்து டாட்டா ஏசி வாகனம் குறுகலான, பெரிய காளியம்மன் கோவில் தெரு வழியாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, தோப்புப்பட்டி பகுதியில் இருந்து, ஒரு ஆட்டோ அந்தத் தெருவில் சென்றது. இரண்டு வாகனங்களும் வழிவிட்டு விலகிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில், டாட்டா ஏசி வாகன ஓட்டுனரும், ஆட்டோ ஓட்டுனரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். மேலும் இருவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை, சம்பவ இடத்திற்கு வரச்சொல்லி அந்த இடத்தில் இரு தரப்பினரும் பயங்கரமாக அடிதடியில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
பின்னர், திடீரென டாட்டா ஏசி வாகன ஓட்டுநர் தனது டாடா ஏசி வாகனத்தை வேகமாக இயக்கி, ஆட்டோ மீது பயங்கரமாக மோதினார். இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் கற்களால் டாட்டா ஏசி வாகனம் மீது எறிந்தார். அப்போது, டாட்டா ஏசி ஓட்டுநர், ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநரை தெருவில் தகாத வார்த்தைகளை சொல்லி விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், தெருவில் டாட்டா ஏசி மற்றும் ஆட்டோவை நிறுத்தி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டு வாகனத்தை மோதி சேதப்படுத்திய சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது.
இச்சம்பவத்தால், பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் நடைபெறுவதாக நினைத்து பொதுமக்கள் கூடினர். இதுகுறித்து, நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.