அரசு விழா நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்திற்கு பிரியாணி பற்றாக்குறை பொதுமக்கள் ஏமாற்றம்
திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு விழா நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்திற்கு பிரியாணி பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சி சேர்ந்த சிவலிப்பட்டியில் 12 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட விழா நடைபெற்றது.
காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 12 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு குடிநீர் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்காக எம். புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் பொதுமக்களை அழைத்து வந்து அங்கு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் அமர வைத்திருந்தார்.
காலை 9 மணி முதல் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு விழா முடிவில் பிரியாணி வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.
லோடு ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட பிரியாணி பொட்டலங்கள் பாதி பேருக்கு கொடுத்த நிலையில் தீர்ந்து போனதால் சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் கிடைக்காமல் போனது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கடும் வெயிலில் தண்ணீரை குடித்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி கொடுப்பதாக அழைத்து வந்து பொதுமக்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.