தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலையை அடைத்து ஆக்கிரமித்த நபர்கள், ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் கீழத் தெருவில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் செல்லக்கூடிய சாலையை இரண்டு தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் காரணமாக தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத மக்கள் வயல் வெளியே நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
12 அடி அகலம் உள்ள அரசுக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்த காரணத்தால் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் விஷ பூச்சிகளுக்கு அஞ்சி செல்ல வேண்டிய நிலைமை உள்ளதாகவும், பத்திரப்பதிவு துறையின் வரைபடத்துடன் புகார் அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நவீன காலத்திலும் தீண்டாமை இருப்பதை இது காட்டுகிறது என்று கூறியுள்ள இவர்கள் அரசாங்கம் ஆக்கிரமிப்பை எடுத்தாலும் நாங்கள் அப்படியே செல்ல விடமாட்டோம் என்று ஆக்கிரமிப்பாளர்கள் கூறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் உடனடியாக தங்கள் வீடுகளுக்கு செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.