பைக்குகள் திருடிய இருவரை சினிமா பாணியில் 4 கி மீ தூரம் விரட்டி சென்று கைது செய்த போலீசார்
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த் குமார். மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தனது Yamaha YZF உயர்ரக இருசக்கர வாகனத்தை கல்லூரி வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார்.
மீண்டும் வந்து பார்த்த போது வண்டி காணவில்லை.இது தொடர்பாக அவர் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் அங்குள்ள சிசிடி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் இரண்டு பேர் வாகனத்தை திருடி செல்வது பதிவாகியுள்ளது.இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதே பாணியில் புதுச்சேரி-விழுப்புரம் எல்லை கிராமங்களை குறி வைத்து இதே இருவர் 10 க்கும் மேற்பட்ட உயர்ரக இரு சக்கர பைக்குகளை திருடியது தெரிய வந்தது. இதில் கிடைத்த சில சிசிடிவி காட்சிகளில் பதிவான இருவரை போலீசார் சிறப்பு சோதனையின் மூலம் தேடினர்.
நேற்று இரவும் வில்லியனூர் பகுதியில் எஸ் பி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் சோதனை தொடர்ந்த போது தனித்தனி பைக்கில் வந்த இருவரை சந்தேகத்துடன் அழைக்க அவர்கள் தப்பினார்கள்.
போலீசார் விடாமல் வில்லியனூரில் இருந்து வடமங்கலம் வரை பைக்கில் 4 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டினர். கடைசியாக வடமங்கலம் முருகன் கோவில் அருகே பேரிகாடர் போட்டு போலீசார் தடுத்து நிறுத்தி விழுப்புரத்தை சேர்ந்த யுவராஜ்(27),சந்தோஷ் (25) என இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் 10க்கும் மேற்பட்ட உயர்ரக பைக்களை திருடியதை ஒப்பு கொண்டனர்.
கைது செய்யப்பட்ட விழுப்புரம் யுவராஜ் விழுப்புரத்தில் 4 இடங்களில் வழிப்பறி செய்ததை ஒப்பு கொண்டனர். இது தொடர்பாக விழுப்புரம் போலீசாருக்கு வில்லியனூர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.