புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் சந்தித்தார் நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தேர்தல் அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தோம். பாஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் இதை வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய பாஜனதா அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம், இதை யாராலும் தடுக்க முடியாது. மத்திய அமைச்சரவையை கூட்டி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக புதுவை முதல அமைச்சர் வழக்கம்போல மவுனம் காத்து வருகிறார்.பாராளுமன்ற தேர்தலின்போது மின் கட்டணம் உயராது என முதல அமைச்சரும், அமைச்சரும் உறுதியளித்தனர். ஆனால் முன்தேதியிட்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல சட்டசபையில் மின்துறை தனியார் மயமாக்க மாட்டோம் என அறிவித்தனர்.
ஆனால் கோர்ட்டில் மின்துறை தனியார்மய டெண்டருக்கு புதுவை அரசு கால அவகாசம் கேட்டு வருகிறது. இதன்மூலம் புதுவை அரசு தில்லுமுல்லு அரசு என தெரிய வருகிறது. ஆட்சியாளர்கள் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லையா? நிர்வாகத்தை நடத்த ஆட்சியாளர்களுக்கு திறமை யில்லையா? புதுவையில் காலாவதியான மருந்துகள் ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்டு, ரீ பேக் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. புதுவை மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. இத மூலம் சில மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. இதை அரசு கண்டு கொள்வதில்லை.
காவல்துறை கட்டபஞ்சாயத்து துறையாக மாறியுள்ளது. நில விஷயத்தில் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்று நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களை விடுவிக்கின்றனர். காவல் துறையின் போக்குவரத்து பிரிவு சுற்றுலா பயணிகளை குறிவைத்து செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் வாகனங்களை சோதனையிடுவது, ஆவண ங்களை கேட்பது என துன்புறுத்தி கையூட்டு பெறுகின்றனர். இதுதொடர்பாக புதிய போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். நான் அவரை நேரில் சந்தித்து புகார் கூற உள்ளேன். காவல்துறை விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
பாண்டிமெரீனா கடற்கரைக்கு எங்கள் ஆட்சியில் பல நிபந்தனை, விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்தும் தற்போது ஒட்டுமொத்தமாக மீறப்பட்டுள்ளது. சுற்றுலா துறையின் எந்த அனுமதியும் இல்லாமல், பாண்டிமெரீனா வளாகத்தில் புதிய கடைகள், பல்வேறு அமைப்புகளை நிறுவியுள்ளனர்.
அமைச்சருக்கு வேண்டியவர்கள் என்பதால் விதிமுறைகளை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதேபோல ஈடன் கார்டன் கடற்கரையில் நடந்த காற்றாடி திருவிழாவின்போது பொதுமக்கள் கடற்கரைக்கு வர ரூ.100 வசூலித்துள்ளனர். இதை அரசு வேடிக்கை பார்த்துள்ளது. புதுவை அரசு மீது தொடர்ந்து பல புகார்களை கூறி வருகிறேன்.
கலால்துறையில் பல ஊழல்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளேன். என்னை போலவே சட்டமன்றத்திலும், வெளியிலும் பாஜனதா எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் ஆகியோரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அரசு யாருக்கும் பதில் கூறுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.