மன மகிழ் மன்றத்திற்கு பூட்டு போட்ட காவல்துறையினர்
தென்காசி நகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றம் காவல்துறையிடம் முறையாக அனுமதி ஆவணம் பெறவில்லை எனக் கூறி காவல்துறையினர் அதிரடி சோதனைக்கு பின்னர் மன மகிழ் மன்றத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சியின் முக்கிய மைய பகுதியாக ரயில்வே மேம்பாலம் விளங்குகிறது. இந்த மேம்பாலத்திற்கு அருகில் புதியதாக மன மகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள மணமகிழ் மன்றத்திற்கு அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகிறது.
எனவே மதுபான விடுதி செயல்பட அனுமதிக்கப்பட்டால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இளைய சமுதாயம் சீரழிவது மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழல் கேள்விகுறியாகும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் டேனி அருள் சிங் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த நிலையில் தென்காசி காவல் துறை சார்பில் மனமகிழ் மன்றத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் பெயரில் காவல்துறையிடம் முறையான அனுமதி ஆவணம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முறையான ஆவணத்திற்கு பின்னர் மனமகிழ் மன்றம் இயங்கலாம் எனவும் தற்போது அதனை பூட்டு போடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனமகிழ் மன்றத்திற்கு பூட்டு போடப்பட்டது.
தென்காசி நகரின் மையப் பகுதியில் பள்ளிகள், அரசு அலுவலகம், குடியிருப்பு நிறைந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றம் காவல்துறையினரின் அதிரடி சோதனையால் பூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.