புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தேர்தல் துறையும், காவல்துறையில் மண்டியிட்டு கிடப்பதால், நேர்மையாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், தலைமையில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும், புரட்சித்தலைவி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று சுப்பையா சாலையில் உள்ள கெளசிக பாலசுப்ரமணியர் ஆலயத்தில் வேட்பு மனுவுக்கு சிறப்பு பூஜை செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் அதிமுக வேட்பாளர், தமிழ்வேந்தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளரும், உள்துறை அமைச்சரமான நமச்சிவாயத்துடன் வந்த 100-க்கும் மேற்பட்ட பாஜகவினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி 100 மீட்டர் தள்ளி நின்ற அதிமுகவினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. வேட்பு மனு தாக்கல் செய்த பின் வெளியே வந்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அதிமுகவினரை கலைந்து போகும்படி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அன்பழகன், பாஜக வேட்பாளரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, தேர்தல் துறையும் காவல்துறையும் மண்டியிட்டு கிடப்பதாக குற்றம் சாட்டிய அவர், இந்த தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை என குற்றம் சாட்டினார்.
எனவே, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நமச்சிவாயம் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், அதிமுக வேட்பாளருக்கு புதுவை மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.