புதுச்சேரிக்கு வந்த ரயிலில் போலீசார் அதிரடி சோதனை
புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க ஆப்ரேஷன் திரிசூல் மூலம் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரிக்கு வரும் ரயில்களில் கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ரயில்வே பாதையின் ஓரத்தில் உள்ள முள் புதர்களில் தூக்கி எறிந்து விட்டு திரும்பவும் வந்து அவர்கள் எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் இன்று புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வில்லியனூர் ரயில்வே நிலையம் வந்த புவனேஸ்வர் ரயிலில் ஏறிய போலீசார் புதுச்சேரி வரை ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடும் ரயிலில் மோப்பநாய் பைரவா உதவியுடன் பயணிகளின் உடைமைகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ரயில்வே பாதையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் போலீசார் சோதனை இட்டனர்.
ஆனால் இந்த சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.