தமிழக காவிரி கரையில் ஒலித்த ஆராதனை
தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடக இசையில், தமிழக காவிரி கரையில் ஒலித்த ஆராதனை. நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் – ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி.
சங்கீத மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜர் இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட தெலுங்கு கீர்த்தனைகளை ஏற்றி இயற்றி உள்ளார். இவர் 1,847 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார்.
இவர் முக்தி அடைந்த பகுள பஞ்சமி அன்று ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி ஆராதனை விழா நடத்தி வருகின்றனர். இதேபோல் 177 வது ஆராதனை விழா கடந்த 26 ஆம் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனை இன்று நடைபெற்றது. இதில் சுதா ரகுநாதன், மஹதி, சிவசிதம்பரம் உள்ளிட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தியாகராஜரின் முத்தான ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் – ஒரே நேரத்தில் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
தெலுங்கு கீர்த்தனைகளை, கர்நாடக இசையில், தமிழக காவிரி கரையில், இசை கலைஞர்கள் ஒன்று கூடி இசை அஞ்சலி செலுத்தியது பரவசத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக உஞ்சவிரத்தி எனப்படும் தியாகராஜரின் வெண்கல சிலையை எடுத்து கொண்டு வீதி வீதியாக பஜனைகளை பாடி சென்றனர்.
தியாகராஜனின் ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.