புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
புதுச்சேரியில் விஷ வாயு தாக்கிய புதுநகரில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என கோரி அப்பபகுதி மக்கள் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இரவு அடுப்புகளை பற்றவைத்து சமையக்க நகராட்சி தடை விதித்தது. மேலும் அப்பகுதியில் அரசு சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இரவு 9 மணிக்கு அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும், புதிய பைப் லைன் புதைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொகுதி எம்எல்ஏ சிவசங்கர் பொதுமக்களுடன் இணைந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டார்.
பாதிக்கப்பட்டு மக்களுக்கு அரசு இரவு உணவு வழங்கியது. ஆனால் நாளை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த இது ஏற்பாடும் செய்ய முடியவில்லை. காலை பள்ளி செல்பவர்கள் குளிக்க வேண்டும், வீட்டில் இருப்பவர்கள் கழிப்பறை பயன்படுத்த வேண்டும், இதற்கு அந்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மறியலில் ஈடுப்பட்ட மக்கள் கேட்டனர்.
இரண்டு மணி நேரமாக போராட்டம் நீடித்த நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுப்பணித்துறையின் பொறியாளர் உமாபதி அங்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தற்காலிகமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வாரத்துக்கு ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும்,நடமாடும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும் நான்கு நாட்களுக்கு பிறகு அனைத்து பைப்லையும் சுத்தம் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் உமாபதி கூறுகையில்,
நாளை மறுநாள் தான் ஊழியர்கள் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை துவங்குவார்கள்.. அதுவரை பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தக் கூடாது.. அவர்களுக்கு நடமாடும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
சுத்திகரிப்பு நிலையம் தற்போது தனியார் வசம் உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை அரசு நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இனி அரசாங்கமே எடுத்து நடத்தும் எனக் கூறிய பொதுப்பணித்து அதிகாரி, அங்கு இயந்திரந்தரங்கள் பழுது என கூறுவது தவறு.. அனைத்து இடங்களும் சரியான முறையில் உள்ளது என்றார்.
விஷ வாயு வெளியானது இரண்டு வீடுகள் மட்டுமே. அந்த இரண்டு வீடுகளிலும் கழிவறை தொட்டி வைக்கப்பட்ட முறை தவறு.அதனையும் மற்றவைகளையும் அரசே சரி செய்து கொடுக்கும் என்றார்..