புதுச்சேரி ஆளும் அரசு குப்பை கூடையாக இருக்கும் அரசாங்கம். எத்தனை பெட்டிஷன்கள் கொடுத்தாலும் குப்பைத் தொட்டியில் தான் போடுகின்றனர்.வைத்தியலிங்கம் எம்பி கடும் விமர்சனம்
புதுச்சேரிக்கு தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவோம்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும், சிபிஎஸ்சி பாடத்திட்டம் வந்த பிறகு ஆசிரயர்களால் பாடம் நடத்த முடியவில்லை. இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை படிக்க முடியாததால் நிறைய மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர்.இதனால் சில அரசு பள்ளிகளில் வகுப்புகள் மூடப்பட்டு வருகின்றது என்றும், எனவே அரசு உடனடியாக இதை கண்டிறிந்து பெற்றோர்களுடன் பேசி மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 6 அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாததால் மேல்நிலை வகுப்புகள் மூடப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி தெரியாமல் பேசுகிறார் என்றும், இது சமுதாய சீர்கேட்டின் நிலைபாடு தான். இதை அரசு உடனடியாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். எத்தனை பெட்டிஷன் கொடுத்தாலும் அதை குப்பை தொட்டியில் போடும் அரசாங்கம் தான் இது. குப்பை கூடையாக இருக்கும் அரசாங்கம். நகரப் பகுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாலும், கட்டிட வசதிகள் இல்லாததால் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் இணைத்து படிக்க வைக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்துகொண்டே வருவதாக கூறிய அவர், இரண்டு பாடத்திட்ட முறையையும் செயல்படுத்துங்கள். சி.பி.எஸ்.சி விரும்புபவர்கள் அதை படிக்கட்டும், தமிழ்நாடு பாடத்திட்டத்தை விரும்புபவர்கள் அதை படிக்கட்டும். மாணவர்களிடையே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை திணிக்க வேண்டாம் என்றார்.
மேலும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கான வக்பு வாரியத்தை செயல்படுத்தி அவர்களுக்கான நலத்திட்டங்களை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையிருக்கு எதிரான நிலைபாட்டை ஆளும் பாஜக அரசு எடுத்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் வக்பு வாரியத்தை செயல்படுத்தவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என கூறிய அவர், புதுச்சேரியில் ஆளும் இந்த அரசு ரேஷன் கடையை திறந்து பணத்திற்கு பதிலாக அரிசி வழங்க மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். புதுச்சேரிக்கு தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசை நாங்கள் வலியுறுத்துவோம் எனவும் காங்கிரஸ் எம்.பி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.