மாவட்ட ஆட்சியரின் சக்திக்கும் பலத்திற்கும் காரணம் ஆவின் பால் தான்
மாவட்ட ஆட்சியரின் சக்திக்கும் பலத்திற்கும் காரணம் ஆவின் பால் தான். பால் உற்பத்தியாளர்களுக்கு சோதனை கருவி மற்றும் கேன் வழங்கும் நிகழ்வில் ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர் கலகலப்பு பேச்சு
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட ரங்கில் காரைக்கால் ஓஎன்ஜிசி காவேரி அசட் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 17 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 9.08 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் சோதனை கருவி மற்றும் பால் கேன்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பால் சோதனை கருவி மற்றும் கேன்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பால் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நவராஜ் ஆவின் மேலாளர் சரவணக்குமார் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய காரைக்கால் ஓஎன்ஜிசி குழும பொது மேலாளர் மாறன் சோர்வு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத மாவட்ட ஆட்சியரை இந்த திருவாரூர் மாவட்டம் பெற்றிருப்பது பெருமைக்குறிய விஷயம். நான் உண்மையாகவே கூறுகிறேன் எனக்கு வேலையில் கொஞ்சம் சோர்வோ கலைப்போ ஏற்படும்போது நான் சிலரை நினைத்து பார்ப்பது உண்டு அதில் ஆட்சியரும் ஒருவர்.
எனக்கு சில நேரங்களில் தெரிய வருவதுண்டு இரவு 10.30 மணிக்கு கூட ஆட்சியர் மீட்டிங்கில் என்று அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான மாவட்டமாக திருவாரூரை ஆக்கி இருக்கிறார் எனும் போது அவருக்கு ஓஎன்ஜிசி சார்பில் சின்ன சின்ன உதவிகளை செய்வது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
நான் நினைக்கிறேன் அவருடைய பலத்துக்கும் அந்த சக்திக்கும் ரகசியம் வந்து ஆவின் பால். காரைக்காலில் ஆவின் பால் கிடையாது அதனால் கூறுகிறேன். ஆட்சியர் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஏதாவது கேட்க வேண்டுமானால் எப்படி கேட்பார் என்றால் பூவுக்கு வலிக்காமல் தேனை வண்டு எடுப்பது போல் கேட்பார். அந்த திறமை தான் மற்ற மாவட்டங்களை விட திருவாரூரில் ஒஎன்ஜிசி அதிக நலத்திட்ட உதவிகளை செய்ததற்கான காரணம் என்று பேசினார். பொது மேலாளரின் இந்த பேச்சு ஆட்சியர் உள்ளிட்ட அந்த அரங்கத்தில் உள்ள அனைவரிடமும் சிரிப்பலையை உண்டாக்கியது.