பெற்ற தாயை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜானகி அம்மாள் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் மகன் கைது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நடுத்திட்டு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜானகி(70). மணல்மேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கணவர் இல்லாத காரணத்ததால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது முதல் மகன் பாரிராஜன். தாய் வீட்டில் இருந்து சிறிது து£ரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பூம்புகார் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பாரிராஜன் வெளியூர் செல்வதற்காக ஓட்டுனர் ஜான்சனிடம் தனது தாய் வீட்டில் உள்ள காரை எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து ஓட்டுநர் ஜான்சன் காரை எடுக்க ஜானகி வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் ஜானகி கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஜான்சன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்தது கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஜானகி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து பாரிராஜன் கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசவார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜானகி கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க செயினை கொள்ளையடித்து, கொலை செய்து விட்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்றுள்ளனர் என தெரிய வந்தது.
தொடர்ந்து மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் திருப்தி இல்லாததால் இறந்து போன ஜானகியின் இரண்டாவது மகன் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதன்பேரில் இந்த வழக்கை நாகப்பட்டினம் சிபிசிஐடி பிரிவு போலீசார் விசாரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில் நாகப்பட்டினம் சிபிசிஐடி போலீசார் கடந்த 2023ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இறந்து போன ஜானகியின் மகன் பாரிராஜன் கூலிப்படையை வைத்து ஜானகியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாரிராஜன்(51) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு தலைஞாயிறு சர்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த கடலை கருணா (எ)கர்ணன்(42) என்பவர் உதவியுடன் தாய் ஜானகியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜானகி அதே தெருவை சேர்ந்தவருடன் தகாத உறவு வைத்து இருப்பதாகவும், இதற்காக அந்த நபருக்கு தாய் ஜானகி தனது நகை ,பணம் முதலியவற்றை கொடுத்து வந்ததால் தாய் மீது ஏற்பட்ட கோபத்தில் கர்ணனை கொலை செய்ய துண்டியது தெரியவந்தது. கர்ணன் மீது மணல்மேடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் சிபிசிஐடி பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு பேரையும் நாகப்பட்டினம் முதன்மை குற்றவியல் நீதிபதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி பிரிவு போலீசார் ஆஜர் படுத்தினர். இரண்டு பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் இரண்டு பேரையும் கடலூர் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.