தற்காலிக பேருந்து நிலையம் இயங்க துவங்கியது
புதுச்சேரி பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 38 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.இதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதையொட்டி இன்று முதல் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு இயங்க துவங்கியது.*
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகள் பேருந்து நிலையத்தில் பகுதி பகுதியாக செயல்பட்டு வருவதால் வேலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வேலைகளை சீக்கிரமாக செய்வதற்கும் அதே போல் பயணிகளின் வசதிக்காக கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் காலை செயல்பட துவங்கியது. காலை 06:00 மணி முதல் அனைத்து பேருந்துகளும் AFT மைதானத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
AFT மைதானத்தில் இருந்து வெளிவரும் சென்னை, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புதுச்சேரி-கடலூர் சாலையில் வலது புறம் திரும்பி சென்று மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி செல்லவும்
கடலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புதுச்சேரி-கடலூர் சாலையில் இடதுபுறம் திரும்பி வழக்கமாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ, டெம்போக்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதியும் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளன.
காத்திருக்கும் நேரம் (வெயிட்டிங் டைம்) எடுக்க வேண்டிய பேருந்துகள் மறைமலை அடிகள் சாலையில் வெங்கட சுப்பரெட்டி சதுகத்திக்கு அருகில் உள்ள பழைய திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லலாம் என்றும் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையத்தில் எழுந்த பேருந்துகள் எங்கு நிற்கும் என்பதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் அலைந்து திரிந்து விசாரித்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு நிற்பதற்கு என நிழல் குடை ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை.
டீக்கடை பழக்கடை குளிர்பான கடை என எந்த கடை இன்னும் வைக்கப்படவில்லை. ஓரிரு நாளில் இவற்றிற்கு இடம் ஒதுக்கப்படும் என நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
தற்காலிக பேருந்து நிலையத்தின் செயல்பாடு குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் ஊழியர்களும் நேரில் பார்வையிட்டனர். மூன்று மாதத்துக்குள் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுவரை தற்காலிக பேருந்து நிலையம் ஏஎப்டி மைதானத்தில் இயங்கும் என ஆணையர் கந்தசாமி தெரிவித்தார். முதல் நாள் என்பதால் சில அசவுரியங்கள் இருக்கும். இதனை பொதுமக்களும் ஆட்டோ-டெம்போ- பேருந்து ஓட்டுனர்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என அப்போது ஆணையர் கேட்டுக்கொண்டார்.