விசை படகில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள காப்பர் புரபுலர் மோட்டார் திருட்டு
புதுச்சேரி மீனவர் விசை படகில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள காப்பர் புரபுலர் மோட்டார் திருட்டு. அரியாங்குப்பம் காவல் துறை தீவிர விசாரணை.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 140 ஆழ்கடல் விசைப்படகு உள்ளது. மீன்பிடி தடைகாலம் இருந்து வந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவு பெற்றும் தடை காலம் முடிந்தும் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வீராம்பட்டினம் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). இவருக்கு சொந்தமான விசைப்படகில் வீராம்பட்டினம் முகத்துவாரப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசாரி பணியாளர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பணிகள் காலதாமதம் ஏற்பட்டது. பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவு பெறாத நிலையில் விசை படகு முகத்துவாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அந்த விசைப்படகில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கார்த்திகேயனின் தந்தை சரவணன் மற்றும் சில மீனவர்கள் அங்கு சென்று உள்ளனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் சுமார் 100 கிலோ காப்பர் எடை கொண்ட புரப்புலர் முழுமையாக அறுத்து திருடு போனது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் முகத்துவரப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் முருகன், முன்னாள் தலைவர் மகாலிங்கம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அந்த பகுதிக்கு சென்று விசைப்படையினை பார்வையிட்டனர்.
இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் இந்த காப்பர் புரபுலரை சிறியதாக வெல்டிங் மிஷின் உதவியோடு தான் அறுத்து இருக்க முடியும். அதற்காக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகவும் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. திருட்டு குறித்து அரியாங்குப்பம் போலீஸ், கடலோர காவல் படை மற்றும் மீன் வளத்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.
புகார் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கடலோர காவல் படையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் குற்றம் சாற்றி உள்ளனர். இந்த கிராமத்தில் இந்த திருட்டு செயல் இதுவே முதல் முறையாகும் எனவும் தெரிவித்துள்ளனர்…