டிராக்டரின் பின்னாடி படுத்துறங்கியவர் மீது டிப்பர் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள நல்லாம்பாக்கம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் தனஞ்செழியன் என்பவர் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்திரி ஏழுமலை என்பவர் நேற்றைய தினம் பணி செய்துவிட்டு மதிய ஒரு மணி நேர உணவு இடைவெளியில் சிமெண்ட் மூட்டையுடன் நின்றிருந்த டிராக்டரின் பின்னாடி படுத்துறங்கியுள்ளார்.
அப்போது டிராக்கடரின் உரிமையாளர் மாசிலாமணி சிமெண்ட் மூட்டையுடன் நின்றிருந்த டிராக்டர் டிப்பரை கழட்டி விடுவதற்கு ஏழுமலையை எழுந்திருக்க கூறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பரை கழட்டிய போது ஒரு டன் சிமெண்ட் மூட்டையுடன் நின்றிருந்த டிப்பர் பின்பக்கமாக படுத்திருந்த ஏழுமலை மீது சாய்ந்துள்ளது. இதனையடுத்து டிராகடர் டிப்பரை தூக்கிவிட்டு அடியில் சிக்கி கொண்டிருந்த ஏழுமலையை புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் டிராக்டர் உரிமையார் மாசிலாமணியை கைது செய்யக்கோரி ராஜாம்பாளையத்தில் திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழப்பிற்கு காரணமானவரை கைது செய்வதாக கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் ராஜாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.