காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் தெப்பல் உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக கோவில் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் பொளர்ணமி தினத்தன்று காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் ஒன்றியம் ராஜகுளம் கிராமத்தில் அமைந்துள்ள குளங்களுக்கெல்லாம் அரசனாக விளங்க கூடிய மிகப் பெரிய குளத்தில் தெப்பல் உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
அதன்படி ராஜகுளம் தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் சுவாமி, திருவீதி பள்ளம், செட்டியார் குளம், வையாவூர், சிட்டியம்பாக்கம் வழியாக கிராமப் பகுதிகளில் வலம் வந்து மண்டகப் படி கண்டருளி ராஜகுளம் கிராமத்திற்கு வந்தடைந்தார்.
ராஜகுளம் கிராமத்திற்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் மாலைகள்,திருவாபரணங்பகள்,அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர, மேளதாளங்கள் முழங்க, குளங்களுக்கு எல்லாம் அரசனாக விளங்கும் மிகப்பெரிய ராஜகுளத்தில் வாழைமரம், மாவிலை தோரணம், மலர் மாலைகள்,மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு ராஜகுளம் குளத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து உற்சவம் கண்டு அருளினார்.
ராஜகுளம் கிராம குளத்தில் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன், மாவட்ட அறங் காவலர் குழு உறுப்பினர் வடக்குப்பட்டு கோதண்டராமன் மற்றும் காஞ்சிபுரம், வையாவூர், சிட்டியம்பாக்கம் மற்றும் ராஜகுளம் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை சுவாமி தரிசனம் செய்து கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு மனமுருகி வணங்கி, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு சென்றனர்.