கிரிவலத்திற்கு வந்த பக்தர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றம் சாட்டி கிரிவல பக்தர்கள் திடீர் சாலை மறியல்..
சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு பரபரப்பு…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இன்று 9 10 மணிக்கு நிறைவடைந்தது.
பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் மேற்கொண்டு தங்கள் ஊருக்கு செல்ல தற்காலிக பேருந்து நிலையங்கள் காத்திருந்தனர்.
கிரிவலத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு இருந்தன.
பௌர்ணமி கிரிவலத்திற்காக வேலூர் சாலை திருக்கோவிலூர் சாலை பெங்களூர் சாலை உள்ளிட்ட 9 சாலைகளில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
கிரிவலம் முடித்து மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள திருச்சி செல்லும் பேருந்துகளுக்கான தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்கள் காலை முதல் பேருந்துக்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துக்காக காத்திருந்தும் கும்பகோணம் திருச்சி சிதம்பரம் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிரிவலம் பக்தர்கள் திடீரென மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிரிவல பக்தர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து போதிய பேருந்துகள் இயக்குவதாக உறுதி அளித்தனர்.
காவல்துறையினரின் உறுதியை ஏற்ற கிரிவலம் பக்தர்கள் சாலை மறியலில் கைவிட்டு களைந்து பேருந்துகளில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
கிரிவல பக்தர்களின் திடீர் இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.