நாகை அருகே கோவிலுக்குள் நடராஜர் சிலையை வைத்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. பணிபுரியும் மெய்க்காவலர் சண்முகம் கோவில் உள்ளே அனைத்து சாமிகளுக்கு தினமும் விளக்கு ஏற்றி வருவது வழக்கம்.
கோவில் உள்பிரகாரத்தில் தல விருட்சகம் அருகே விஸ்வநாத சாமி கோவிலில் விளக்கேற்றி உள்ளார். அப்போது விஸ்வநாதர் சாமி அருகே ஒரு ஜவுளி கடை பை ஒன்றும் அதன் அருகே ஒரு நடராஜர் சிலை மற்றும் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இருந்துள்ளது.
இதையடுத்து மெய்க்காவலர் சண்முகம் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் கீழ்வேளூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) பத்மநாபன் கிராம நிர்வாக அலுவலர் ரவிந்திரபாண்டியன் ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.
அந்த சிலை உலோகத்தால் ஆன நடராஜர் சிலை என தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை மர்ம நபர்களால் வைத்து சென்று உள்ளனர். நடராஜர் சிலை சுமார் ஒன்றை கிலோ எடையும், ஒன்னேகால் அடி உயரம் கொண்ட பழைமையான உலோக சிலை போல் உள்ளது.
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் மேலும் இந்த சிலை கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.