தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு – குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி
காலி குடங்களுடன் சாலை மறியல் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் திரளும் பெண்களால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டர் பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் வழங்கப்படும் குடிநீரானது முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குடிநீர் முறையாக வழங்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதேபோன்று செங்கோட்டை நகர் பகுதியில் கீழப்புதூர் பகுதிகளிலும் பல நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என தொடர் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை காலம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடானது நிலவி வருகிறது.
இதன் எதிரொலியாக பொதுமக்களின் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.