மக்களவைத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என்று, பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் – தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.