போதையில் குத்தாட்டம் போட்டுகொண்டிருந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களை வெளியேற்றியதால் பரபரப்பு
புதுச்சேரியில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கிய பப்பை மூட வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால், போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து மது போதையில் குத்தாட்டம் போட்டுகொண்டிருந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் 200-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார் மற்றும் பப் பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பார்கள் நள்ளிரவு 12:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒயிட் டவுன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இயங்கும் ரெஸ்டோ பார், பப் பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்குவதாகவும், நள்ளிரவில் அதிக சத்தத்துடன் கூச்சல் எழுப்புவதால் தொந்தரவாக இருக்கிறது என்றும், துாங்க முடியவில்லை எனவும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,மகாத்மா காந்தி வீதி மற்றும் மிஷன் வீதியில் உள்ள 2 (Toast, Zouk) பப்புகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரை அதிக சத்தத்துடன் இயங்குவதாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, பப் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பப்புகளுக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்து, அங்கு மதுபோதையில் குத்தாட்டம் போட்டுகொண்டிருந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.