சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க சுவாமியை மடத்திலிருந்து வெளியேற கிராம மக்கள் வலியுறுத்தியதால் ஊராட்சி அலுவலகத்தில் ஆதீனம் அமர்ந்ததால் பரபரப்பு.
சூரியனார் கோயில் ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக அவர் ஆதீனமாக நீடிக்க கூடாது மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கிராம மக்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து மடத்தின் வாசலுக்கு சென்றனர். மூன்று பேரை மட்டும் உள்ளே வரச் சொல்லி ஆதீனம் மகாலிங்க சுவாமி பேசியுள்ளார்.
அப்போது துறவறத்தில் இருந்து இல்லறத்திற்கு சென்றதால் தாங்கள் ஆதீனமாக நீடிக்க வேண்டாம். நீங்கள் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மகாலிங்க சுவாமி அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்றார். ஆனால் நீங்கள் உடனடியாக தற்போது மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து உடனடியாக அவர்களுடன் மடத்திலிருந்து வெளியே வந்தார். அவரது பூஜை பயன்பாட்டுப் பொருட்கள் இருந்த பையை எடுத்து வந்தபோது அதை எடுத்துச் செல்லக்கூடாது என ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதனை பிடுங்கினர். அந்தப் பையில் தங்க ருத்ராட்சம் உள்ளிட்ட விசேஷ பூஜை பொருட்கள் இருந்ததாக கூறப்பட்டது. மடத்தில் வாசல் கதவையும் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆதீன மகாலிங்க சுவாமிகள் அருகிலுள்ள சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாசல் பகுதியில் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவருடன் மடத்தில் இருந்த இரண்டு ஸ்ரீ கார்யம் பரமானந்தம், சச்சிதானந்தம் சுவாமிகள் உடன் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கும்பகோணம் கீர்த்தி வாசன், திருவிடைமருதூர் ராஜு மற்றும் போலீசார் வந்து கிராம மக்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
அப்போது கிராம மக்களில் மற்றொரு தரப்பினர் ஆதீனம் மகாலிங்க சுவாமி மீண்டும் மடத்திற்குச் செல்ல வேண்டும். அவரிடம் மடத்தின் சாவியை கொடுங்கள் என மற்றொரு தரப்பினர் கூறியதால் இருதரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரை ஆதீனமாக நியமித்த திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து வந்து இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறினர் . இதனை அடுத்து திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, ஸ்ரீராம், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வந்து பேச்சு வர்த்தையில் ஈடுபட்டனர். என்னை பதவியில் உட்கார வைத்து விட்டு எந்த உதவியும் செய்யவில்லை. நான் நேரடியாக பக்தர்கள் உதவி கொண்டு ஆதீன தலைமை மடத்தில் ரூ. ஒரு கோடியே 40 லட்சம் செலவில் திருப்பணி செய்து உள்ளேன். நான் பலமுறை திருவாவடுதுறை ஆதீனத்துடன் சூரியனார் கோவில் ஆதீனத்தை இணைத்து விடுங்கள் என்று கூறினேன். அப்போது வரவில்லை. இப்போது ஏன் வருகிறீர்கள். நான் மடத்தின் சாவியை அறநிலைத்துறையிடம் தான் ஒப்படைப்பேன் என்றார். அதற்கு திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் பேசுகையில், நீங்கள்தான் திருவாவடுதுறை ஆதீனத்துடன் மோதல் போக்கை உருவாக்கி உள்ளீர்கள். தற்பொழுது மரபுமீறி செயல்பட்டுள்ளீர்கள். தாங்கள் ஆதீன மரபில் குருமகாசந்நிதானமாக இருக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றனர்