மூழ்கும் கப்பலில் எலிகள் இருக்காது – எச்.ராஜா திருச்சியில் பேட்டி
மூழ்கும் கப்பலில் எலிகள் இருக்காது, என்பது ஆங்கில பழமொழி. வேல்முருகன், திருமாவளவன் போன்றவர்கள் மூழ்குகின்ற தி.மு.க., என்ற கப்பலில் இருந்து வெளியேறும் எலிகள் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல. என்று எச்.ராஜா திருச்சியில் பேட்டி
திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது…..கடந்த 1998 ல் பிப். 14ம் தேதி, அத்வானி கோவை வந்த போது, அல்உம்மா இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் வைக்கப்பட்டதில், 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1984ல், ராம கோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கொலை வெறி நபர். அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் 30, 40 பேர் செல்லலாம் என்று போலீசாரோ, அரசாங்கமோ சொல்லியிருந்தால், நாகரீகம் தெரிந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
கடந்த 15 நாட்களுக்கு முன் வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்பதை அனுமதித்துள்ளனர். தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. சட்டத்தின் ஆட்சியில்லை என்பதற்கு, கோயம்புத்துாரில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டு. போலீஸ் துறைக்கு வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லை. வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசாங்கம், போலீஸ் பாதுகாப்பு கொடுத்து, ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் ஒன்று சேர அனுமதித்துள்ளது. மக்களால் துாக்கியெறியப்பட வேண்டிய பொதுஜன விரோத அரசு இது. ஸ்டாலின் அரசு, ஹிந்துக்களுக்கு விரோதமாக, பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பது கண்டிக்கத் தக்கது. காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு உண்மையின் பால் ஈர்ப்பு இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுகின்றனர்.
இந்திராகாந்தி காலத்தில், சட்டசபைகளை முடக்கி, அரசியலமைப்பு சட்டத்தின் குரல்வளையை நெரித்தனர்.
கச்சத் தீவை இலங்கைக்கு சட்டவிரோதமாக தாரை வார்த்த காங்கிரஸ் அரசை, பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர் கருணாநிதி. மக்கள் இதை அறிந்து உள்ளதால், இனிமேலும், காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி கட்சிகள், மக்களை ஏமாற்ற முடியாது. கடலில் மூழ்கும் கப்பலில் எலிகள் இருக்காது, என்பது ஆங்கில பழமொழி. வேல்முருகன், திருமாவளவன் போன்றவர்கள் மூழ்குகின்ற தி.மு.க., என்ற கப்பலில் இருந்து வெளியேறும் எலிகள் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல. இது எதார்த்தமாக நடக்கும் சம்பவம். கூட்டணி குறித்து, கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதே சமயம், கருத்துச் சொல்லும் நுாறு சதவீதம் உரிமை மாநில தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் உள்ளது. உங்கள் மூலமாக எங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு, கட்சித் தலைமைக்கும் எனக்கும் இடைவெளி கிடையாது என்றார்.