திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய திருக்குளத்தில் அடியார்களுக்கு அன்னம் படைப்பதற்காக சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கமலாலய திருக்குளத்தில் பொற்காசு எடுக்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி ஆழித்தேரோட்டத்தின் போது அடியார்களுக்கு அன்னம் படைப்பதற்காக வேண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் விருத்தாச்சலம் கோயிலில் பதிகம் பாடி பெற்ற பொற்காசுகளை திருடர்களிடமிருந்து பத்திரமாக திருவாரூருக்கு கொண்டு வருவதற்காக விருத்தாச்சலம் ஆற்றில் இட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்ததாக ஐதீகம். அந்த நிகழ்வு நம்பியாரூரான் அறக்கட்டளை சார்பில் கமலாலய தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக சுந்தரமூர்த்தி சுவாமிகளின் விக்கிரகத்திற்கு பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. பின்னர் கமலாலய குளத்திலிருந்து பொற்காசுகள் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் நம்பியாரூரான் அறக்கட்டளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பதிகம் பாடி பொற்காசுகளை எடுத்தனர். பின்னர் பொற்காசுகள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.