ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , எளியோருக்கு கொடையை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம் இன்று ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குத்தாலம், திருவாவடுதுறை, தேரிழந்தூர், பண்டாரவடை, ஆக்கூர், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், தைக்கால் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஜாமிஆ மஸ்ஜிதில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் பெரியோர்கள், மற்றும் குழந்தைகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.