திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 5-ம் திருநாளான இன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா 14 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 5-ம் திருநாளான குடவருவாயில் தீப ஆராதனை நடந்தது.
இதனை முன்னிட்டு மேலக் கோவிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23-ம் தேதி நடைபெறுகிறது.