in

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான நேற்று இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்…

முருப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 02-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. 7-ம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்த சஷ்டி திருக்கல்யாண திருவிழாவையொட்டிநேற்று அதிகாலை 3-00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4-00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று காலை 5-00 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகே உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

மாலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி, சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக தபசு காட்சி மண்டத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர்.

அங்கு தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமிககும், அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர், அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.

தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமியும், அம்பாளும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் இரவு ராஜகோபுர மேற்கு வாசல் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..

What do you think?

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம்