திருக்கார்த்திகை தீபத்திருவிழா 4 ஆம் இரவு உற்சவம்….
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் உலா…
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4 ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அண்ணாமலையார் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கோவிலில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டி வாசல் வழியாக திருக்கோவில் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், பராசக்தி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் வெள்ளி காமதேனு வாகனத்திலும் , விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைத்தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன்,சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக திருக்கோவிலின் 4 மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.