திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் மோகினி அலங்கார புறப்பாடு
ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம். ஐந்தாம் நாள். காலை மோகினி அலங்கார புறப்பாடு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சாமியின் மோகினி அலங்கார புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது.
மோகினி அலங்கார புறப்பாட்டை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு சூட்டி கலைந்து எடுத்துவரப்பட்ட மலர் மாலைகள், மலர் ஜடை, இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவற்றை அலங்கரித்துக் கொண்ட உற்சவர் மலையப்ப சுவாமி தந்த பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்க புறப்பட்டார்.
மோகினி அலங்காரத்தில் மயங்கிராக கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கில் எழுந்தருள கோவில் மாட வீதிகளில் மோகினி அலங்கார புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் மோகினி அலங்கார புறப்பட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன புறப்பாடான கருட வாகன புறப்பாடு நடைபெற உள்ளது. கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர்.
மேலும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மாலை கருடவாகன புறப்பாடு நடைபெறும் போது திருப்பதி மலையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகம் இருக்கும் என்று தேவஸ்தான நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.
எனவே அதற்கு தேவையான வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பணியில் தேவஸ்தான நிர்வாகம், ஆந்திர மாநில போலீஸ் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.