திருப்பத்தூர் ஸ்ரீகோட்டைகருப்பர் கோயில், 22 ஆம் ஆண்டு பால்குட விழா
திருப்பத்தூர் அருகே ஸ்ரீகோட்டைகருப்பர் கோயில், 22 ஆம் ஆண்டு பால்குட விழா குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், அலகு குத்தி, தீச்சட்டி, பால்குடம் சுமந்து பக்தர்கள் வழிபாடு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லுவெட்டு மேடு பகுதியில் குடிகொண்டுள்ள அருள்மிகு கோட்டைகருப்பர், முன்னஞ்செட்டிகாளி கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று 22 ம் ஆண்டு பால்குடம், பூத்தட்டு, அன்னதான விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இப்பகுதி மக்கள் விரதம் இருந்து இரவு நேரத்தில் கும்மி கொட்டி கோட்டைகருப்பரை வழிபட்டு வந்தனர்.
அதோடு பனை ஓலையால் குடிசை அமைத்து, பழைமை மாறாமல் சங்கிலி கருப்பர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபட்டனர். இதனையடுத்து கல்வெட்டுமேடு ஆலமரத்து ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலிலிருந்து கல்லுவெட்டுமேடு, இந்திராநகர், மருத்துவநகர் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 4 கி.மீ வரை பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் வந்த பக்தர்கள் செல்வ விநாயகர் ஆலயம் முன்பு வழிபாடு நடத்தினர்.
பின்பு அங்கிருந்து ஸ்ரீ கோட்டை கருப்பர் கோயிலை வந்தடைந்து தங்களது காணிக்கையை நிறைவேற்றினர். வழிநெடிகிலும் பெண்கள் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை ஊற்றி, சாமியாடிகளையும், பக்தர்களையும் வரவேற்றனர்.
அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டி குழந்தைகளை சுமந்து வந்தனர். மதியம் கோயில் முன்பு அன்னதானம் நடைபெற்றது.