திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும்
கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.பி.எம்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய செங்குந்தர்மகாஜன சமுதாய மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிகளுக்கு தங்களது முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர், திருப்பூர் ரயில் நிலையத்திற்கு கொடி காத்த திருப்பூர் குமரன் பெயரை வைக்க வேண்டும். நூல் விலை ஏற்றத்தால் நெசவாளர்கள் மிகவும் பாதித்து அடைந்து உள்ளனர். நூலுக்கு 10% மானியம் வழங்க வேண்டும்.
நெசவாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் “கைத்தறி நெசவாளர் பூங்கா” அமைக்க வேண்டும்.
நெசவாளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு வட்டி இல்லாத நகைக்கடன் வழங்க வேண்டும். கரூர் வடிவேல் நகர், முனியப்பன் கோவில் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
சொந்த வீடு இல்லாத ஏழை நெசவாளர்களுக்கு இலவசமாக சொந்த வீடு அமைத்து தர வேண்டும். திருப்பூர் குமரன் பிறந்த நாளை தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப் பட்டதாக கூறினார்.