டைட்டானிக் மரக்கதவு 5 கோடிக்கு ஏலம்
டைட்டானிக் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோஸை ஜாக் காப்பாற்றி ஒரு மர கதவு மேல் படுக்கவைத்து இருப்பார். மரக்கதவை பிடித்தபடி ஜாக் மிதந்து கொண்டு இருப்பார். அப்படி ஜாக் மற்றும் ரோஸ் மிதக்க பயன்படுத்திய அந்த மரக்கதவு தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அதை 5 கோடி ரூபாய்க்கு ஒரு தீவிர ரசிகர் ஏலம் எடுத்துள்ளார்.
டைட்டானிக் படத்தில் பயன்படுத்திய மரக்கதவு மட்டுமின்றி 1984ம் ஆண்டு வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்’ பயன்படுத்தப்பட்ட சாட்டை, 1980ம் ஆண்டு வெளியான ‘தி ஷைனிக்’ படத்தில் பயன்டுத்தப்பட்ட கோடாரி உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்பட்டன. ஆனால் மற்ற பொருட்களை காட்டிலும் டைட்டானிக் படத்தில் பயன்படுத்தப்பட்ட மரக்கதவு தான் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி பெரிய விபத்துக்குள்ளானது டைட்டானிக் கப்பல். இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் ஒரு காதல் கதையை சேர்த்து மிக அழகான ஒரு காவியமாக ‘டைட்டானிக்’ என்ற படத்தை உருவாக்கியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அபரிதமான வசூலையும் குவித்து சாதனை படைத்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் என 11 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை குவித்தது.