குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்
குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் மெயின் அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் , புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து சீராக கொட்டி வருகின்ற நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகளவு காணப்படுகிறது.
மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், வார இறுதி நாட்கள் என்பதாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குற்றாலம் மெயின் அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இதன் காரணமாக கரையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.