நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மனித கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
ஆட்டோக்கள் வணிக நிறுவனங்கள் இயங்காததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஊராட்சியில் ஊருக்கு வடபுறத்தில் அமைந்துள்ள அணுசங்கமம் திருமண மண்டபத்திற்கு அருகில் நெல்லை மாவட்ட சுகாதார மேம்பாடு இயக்கம் சார்பில் மனித கழிவு மையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூடங்குளத்தில் மனித கழிவு மையம் அமைக்க கூடாது எனவும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இது மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
கூடங்குளத்தில் மனித கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று உள்ளூர் வியாபாரிகள் பொதுமக்கள் தங்களது கடைகளுக்கு முன் கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோக்களை ஓட்டாமல் தங்களது வீடுகளில் நிறுத்தியுள்ளனர்.
இதனால் கூடங்குளத்தில் உள்ள தேநீர் கடை பலசரக்கு நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் கூடங்குளத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது