ஷூவில் சிக்கிய ரிஷி சுனக் மன்னிப்பு கோரினார்
நேர்காணல் நிகழ்ச்சியில் அடிடாஸ் சம்பா ஷூ அணிந்ததற்காக, சம்பா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.
ரிஷி சுனக் தனது அரசின் வரிக் கொள்கைகள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்தார். இந்த வீடியோ வெளியானபின் ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக் வெள்ளை நிற சட்டை, நேவி நிற பேண்ட், கருப்பு நிற சாக்ஸ் அணிந்து அத்துடன் அடிடாஸ் சம்பா ஷூவும் அணிந்திருந்தார்.
இதற்கு அடிடாஸ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வித்தியாசமாகவும், ட்ரெண்டாகவும் அணிவதாக நினைத்துக்கொண்டு, சம்பா ஷூவின் லுக்கையே ரிஷி சுனக் கெடுத்துவிட்டார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அடிடாஸ் சம்பா ஷூவுக்கு பெரிய வரலாறே இருக்கிறது. பல பிரபலங்களே இதற்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
சம்பா ஷூவுக்கு ரிஷி சுனக் சாவு மணி அடித்திருப்பதாக பிரபல காலணி வரலாற்று நிபுணர் எலிசபெத் செம்மெல்ஹேக் கடுமையாக சாடியுள்ளார்.
இதை அடுத்து, அடிடாஸ் சம்பா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ரேடியோ நிகழ்வில் பேசியபோது, “சம்பா ரசிகர்களிடம் நான் முழுமனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் சம்பா உள்பட அடிடாஸ் ஷூக்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன்.
முதல்முறையாக எனது சகோதரர் அடிடா ஷூவை கிறிஸ்துமஸ் பரிசாக எனக்கு வழங்கினார். அதற்குப்பிறகு நான் தொடர்ந்து அடிடாஸ் ஷூக்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். நான் அடிடாஸ் பொருள்களுக்கு நீண்ட கால பக்தனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.