திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆதியன் பழங்குடியின மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆதியன் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவின் கீழ் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கு பழங்குடியினர் என (ST )சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வருக்கு பல்வேறு மனுக்களை அளித்தும் எந்தவித பலனும் இல்லை என வலியுறுத்தி நேற்று முதல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆதியின் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி பகுதியை சேர்ந்த ஆதியன் பழங்குடியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்களும் குழந்தைகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக ஸ்ரீவாஞ்சியம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இதே வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரக்குடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பழங்குடியின மக்கள் உடனடியாக தமிழக அரசு மற்ற மாவட்டங்களில் வசிக்கும் தங்கள் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் சான்றிதழை தங்களுக்கும் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.