திருச்சி ஸ்ரீரங்கம் பகல் பத்து நான்காம் நாள் உற்சவம் நம்பெருமாள் திருநாரணன் முத்துக்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து ,ராபத்து என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நான்காம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் (30 ஆம் தேதி) தொடங்கியது.
பகல் பத்து நான்காம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு என்னும் திருநாரணன் முத்துக்கொண்டை அணிந்து அதில் கலிங்கத்துராய் நெற்றி மேல் சூர்ய வில்லை சாற்றி (சூர்ய குல திலகம் என இராமரை பாடிய ஆழ்வார் பாசுரத்திற்கு ஏற்ப), கர்ண பத்திரம் , சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம், திருமார்பில் பங்குனி உத்திரப்பதக்கம், அதற்கு மேல் ஸ்ரீரங்கநாச்சியார் – அழகிய மணவாளன் பதக்கம் ,அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, பவழ மாலை ,18 வட முத்து சரம் , காசு மாலை ,பின்பு சேவையாக – புஜ கீர்த்தி , சிகப்புக்கல் ,சூர்ய பதக்கம்; கையில் தாயத்து சரங்கள் , தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார். கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அர்ஜுனா மண்டபத்தில், ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
இன்று மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நம் பெருமாள் இரவு 9 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்று அடைகிறார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். 17-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 16-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.