ஆன்லைன் மூலம் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும் என மோசடி செய்த இருவர் கைது
ஆன்லைன் மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்தியா முழுவதும் 42 வழக்குகளில் தொடர்புடைய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மேளா மற்றும் ஒசாமா கான் ஆகிய இருவரை புதுச்சேரி இணைய வழி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த ராகுல் கிருஷ்ணா புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ஹரியானாவை சேர்ந்த KIH Vacation Club என்ற நிறுவனத்தில் ஆன்லைனில் டூரிஸ்ட் பேக்கேஜ் 85,000- ரூபாய் பணம் செலுத்தினால் ஓர் ஆண்டு பிரீமியம் அடிப்படையில் இந்தியாவில் இருக்கிற சுற்றுலா தலங்களில் எங்கு வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் இலவசமாக தங்க உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கும் என்று கூறியிருந்ததை அடுத்து பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
மேலும் பத்து நாட்கள் மலைவாழ் தளங்களில் சென்று சுற்றுலா தளங்களாக தங்கி சாப்பிட அனைத்து ஏற்பாடுகளையும் அமைத்து தருகிறோம் என்று கூறியதை அடுத்து மேலும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணத்தை இணைய வழியில் செலுத்தி இருக்கிறார்.
தொடர்ந்து பணத்தை செலுத்தி எட்டு மாத காலமாகியும், அவருக்கு எந்த ஒரு இடத்திற்கும் சென்று தங்குவதற்கு அவர்கள் பேக்கேஜ் அனுப்பவில்லை என கூறப்படுகின்றது.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் இந்தியா முழுவதும் அவர்கள் இதுபோன்று மோசடி செய்துவிட்டு, கொடைக்கானல் பகுதியில் இருப்பது தெரியவந்ததை அடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சென்று ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மேளா மற்றும் ஒசாமா கான் ஆகிய இரண்டு நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து, விசாரணை மேற்கொண்டு கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…