ராஜபாளையத்தில் வரும் 31 மற்றும் 1 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம்
ராஜபாளையத்தில் தென்காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி வரும் 31 மற்றும் 1 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நேரடி மற்றும் இணை சங்கங்கள் சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் மற்றும் பிரதான தென்காசி தேசிய நெடுஞ்சாலை, முடங்கி ஆறு சாலை, டிபி மில்ஸ் சாலை உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தென்காசி சாலையில் மேம்பாட்டு பணிகளுக்கான குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளங்கள், சாலைகள் இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ளது. மழை நேரத்தில் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆழம் தெரியாமல் மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் குடும்பத்துடன் அடிக்கடி தவறி விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வியாபார சங்கம் மற்றும் வியாபாரிகள் சார்பில் தேசிய நெடுஞ்சாலையின் நகாய் திட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாபார சங்கக கட்டடத்தில் நடைபெற்றது. ஆலோசனையின் முடிவில் வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி தொடங்கி ஒன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 6:00 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வியாபார சங்கத்தின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் இணை சங்கங்களின் சார்பில் நகரில் செயல்படும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கப்பட உள்ளது என வியாபார சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.